இந்தியா, அகமதாபாத் விமான விபத்து- 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Aan Air India 787 Dream liner flying from Ahmedabad to London crashed in a residential area, killing over 200 people.

இந்தியா, அகமதாபாத் விமான விபத்து- 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Dated: 13.6.2025   Time: 10.35 ​am  By: Punithai Chandran

இந்தியா, அகமதாபாத்

லண்டன் நோக்கிச் சென்ற (787 Dreamliner) ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று வியாழக்கிழமை பிற்பகல் குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையம் அருகே, குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியது. 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் விழுந்ததில் ஒரு மருத்துவர் விடுதியும் சேதமடைந்தது.

இந்த விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷார், 7 போர்த்துகீசியர்கள் மற்றும் ஒரு கனடா நாட்டவர் உட்பட 230 பயணிகளும், 12 விமான ஊழியர்களும் இருந்தனர்.  பிற்பகல் 1.38 மணிக்கு அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் கேட்விக் நோக்கி விமானம் புறப்பட்டது.

தாங்கள் ஒரு நியாயமான மற்றும் முழுமையான விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயு கின்ஜரப்பு தெரிவித்தார்.

டாடா குழுமம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 மில்லியன் ரூபாய் (RM492,188.30)  இழப்பீடு வழங்குவதாகவும், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளை ஏற்பதாகவும் அறிவித்துள்ளது. மேலும், பி.ஜே. மருத்துவ விடுதியை புனரமைப்புச் செய்வதற்கும் உதவ உள்ளதாக. அதன் தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்தார்.

இவ்விபத்து குறித்து  பல உலகத் தலைவர்களும், போயிங் நிறுவனமும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

விபத்துக்குப் பின்னர்,  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகமதாபாத் விமான நிலையத்தின் அனைத்து விமானச் சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டன.

நன்றி. மலேசியக் கினி