தங்கமா? தங்கமான கணவனா?

Is it gold? Is it a golden husband?

தங்கமா? தங்கமான கணவனா?

Date :11 May 2025 News by: Ganapathy / Punithachandran 

 ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும்போது அவ்விருவருக்கும் இடையில் உருவாகின்ற புதிய உறவு முறையில் அக்குறிப்பிட்ட ஆண், பெண்ணுக்கு கணவனாக அமைகிறான். சமுதாயத்தின் பண்பாடுகளை ஒட்டிய கணவன் என்னும் உறவு வரும்போது, குணங்களில் சற்று வேறுபாடுகளையும் காண்கிறாள். ஒரு புதிய வீடு – ஒரு புதிய உறவு – ஒரு புதிய சூழ்நிலை – ஒரு புதிய பழக்க வழக்கங்கள் – ஒரு புதிய வரைமுறைகள் – விதிமுறைகள் என்று புகுந்த வீட்டிற்கு வரும் மனைவி, தன்னை அந்தக் குடும்பத்தோடு – கட்டிய கணவனோடு ஒன்றித்து வாழ்வதற்கு பல மாதங்கள் – ஆண்டுகள் கூட ஆகலாம். இதனையெல்லாம் உணர்ந்த அந்த கணவன், தனது மனைவியின் மனநிலையினை நன்கு அறிந்து – புரிந்துக்  கொண்டு, அவளுக்கு ஏற்ற வகையில் தன்னை ஓரளவுக்கு மாற்றிக் கொண்டு, அவளது மனநிலைக்கு ஏற்ற சூழ்நிலைகளைத் தர வேண்டும். இந்த ஒரு சூழ்நிலையில்தான், அந்த மனைவியானவள் தங்கத்தை மறந்து, தனக்கு தங்கமான கணவனே கிடைத்திருக்கிறான் என்ற எண்ணத்தை மனத்தில் விதைக்கிறாள்.

 

இவர்கள் எல்லோமே நல்லவர்களாக இருப்பார்களா, இல்லை கெட்டவர்களாக இருப்பார்களா, இல்லை கண்டிப்பானர்களாக இருப்பார்களா என்று ஒரு பெண் மனம் நினைக்கிறது. இதில் ஏதும் தவறு இருக்கிறதா என்றுகூட நினைக்கலாம். இவ்வாறு எண்ணுவதால் தவறுகள் இருக்கிறதா என்றால், அதில் தவறே இல்லை என்றுச் சொல்லலாம்!

ஒரு பெண், \ குழந்தைப் பருவத்தில் அம்மா, அப்பா, பள்ளிக்கூடத்தில் ஆசிரியர், கல்லூரி பேராசிரியர், முதல்வர், அலுவலக உயர் அதிகாரி, 
தொழிலாளி, ஆண் – பெண் நட்பு வட்டாரம் என பல்வேறு நிலைகளில் ஒரு ஆண் மகனைச் சந்திக்கும் – பழகும் நிலை ஏற்படுகிறது. 

இந்தக் குணங்களைப் பார்க்கும் ஒரு பெண், தனக்கு வரும் கணவன் நல்ல கணவனாக வர வேண்டும் என்று இரவும் பகலும் எண்ணுகிறாள். பெரும்பாலும், இந்த வகை குணங்களைப் பார்த்துள்ள ஒரு பெண், திருமணத்திற்கு பிறகு, அவனின் குணங்களுக்கு ஏற்றவாறு வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டுகிறாள்

ஒருவனுக்கு ஒருத்தி - ஒருத்திக்கு ஒருவன் என்ற கட்டுப்பாடு தமிழர்களின் பண்பாக இருந்து வருகிறது. இதனை ஒரு தாரம் என்கிறோம். ஆனாலும் பல தாரங்கள் கணவர்மார்களும் உள்ளனர். 

கணவனே கண்கண்ட தெய்வம்! மணாளனே மங்கையின் பாக்கியம்! கல்லானாலும் கணவன் – புல்லானாலும் புருஷன்!

என்ற முதுமொழிகள், பெண்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்து விடுவதால், அவள் வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கித் தவிக்கிறாள். நல்ல மனைவிக்கு நல்ல கணவன் அமைவதில்லை - நல்ல மனைவிக்கு நல்ல கணவன் அமைதிவதுமில்லை! ஏன் இந்த முரண்பாடு காணப்படுகிறது!

விடைக் கிடைக்க முடியாத கேள்வி இது!

பொதுவாக வேலைக்குச் சென்று வந்த மனைவியிடம் அல்லது கணவனிடம் ஒரு நல்ல பாடல் பாடியோ, அல்லது நல்ல அன்பான வார்த்தைகளைக் கூறியோ பேசத் தொடங்க வேண்டும் - தனது அன்பை வெளிப்படுத்த வேண்டும். கோபத்தையெல்லாம் மறந்து, கணவனிடம் அன்பாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் கணவன் பொறுமைசாலியாக  இருக்கலாம்.  வெளியிடங்களில் தனியாக பொறுமையாக நிற்க முடியாதவர்கள் கூட, மனைவிக்காக, அவளின் மன நிறைவுக்காக, அவளது அன்புக்காக, அவளது அர்ப்பணிப்புக்காக, முகம் கோணாமல், பொறுமை காத்து இருப்பவர்களும் உண்டு. இது வாழ்வின் மகிழ்ச்சிக்குரிய ஒரு தத்துவம் என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டிலும் அல்லது அலுவலகத்திலும் அல்லது இரு பணிகளையும் செய்யும் பெண்ணை - கணவன் சீரும் சிறப்புமாக வைத்திருக்கும்போது, அவளுக்கு தங்கத்தின் மீது விருப்பம் வராது - கட்டிய கணவன் தங்கமானவன் என்ற நிலையில், அவன்மீது தனிப்பட்ட விருப்பம் வந்து சேரும். 

ஒரு கணவனின் உறவு அற்புதமானது. ஒருவருக்கொருவர் அடிக்கடி பேசிக் கொண்டே இருக்க வேண்டும்.  கருத்து வேறுபாடுகள் அல்லது சண்டை இருந்தால் மட்டுமே சமாதானம் வரும் – புரிதலும் வரும். நமது பிள்ளைகள் கூட ஒரு காலத்தில் பெற்றோர்களை விட்டு பிரிந்து போவார்கள். ஆனால் கணவன் - மனைவி உறவு அவ்வாறு அல்ல! இரட்டை தண்டவாளம் போல எப்பொழுதும், மகிழ்ச்சியாக - பிரியாமல் இணைந்தே வாழ்க்கைச் செல்லும். . சின்னச் சின்ன ஊடல்களும் - கூடல்களும்தான் இல்லற வாழ்க்கையை இன்னும் சிறப்பாக்கும்.

மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம் என்றால், கணவன் அமைவதும், மனைவிக்கு இறைவன் கொடுத்த வரம் என்றும் சொல்லலாம் அல்லவா? ஒவ்வொரு மனைவிககும் தன் கணவனே ஒரு வரம்தான்! கணவன் சரியில்லை என்று வெளியே மனைவி சொன்னாலும்கூட, ஒரு பேதைப் பெண் ஏழேழு ஜென்மங்களுக்கும் இதே கணவர்தான் தனக்கு வரவேண்டும் என்ற ஆசை உள்மனத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு, தங்கம் பெரியதா? தங்கமான கணவன் பெரிதாகத் தெரிவானா? 

அளவுக்கு மேல் கணவன் மீது அன்பை வைத்திருக்கும் பெரும்பாலான பெண்கள், அதனை வெளிக்காட்டுவதே இல்லை. இந்த நிலையில் கணவனும், தனது மனைவிக்கு தன் மேல் பாசம் இல்லை என்று எடுத்துக் கொள்ளும் கணவன்மார்களும் உள்ளனர். இதுபோன்ற நிலை வரும்போது, ஒரு சிறுப் பிரச்சினையைக் கூட பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளும் கணவனும் உள்ளனர். இதனைப் பெண்களே தீர்க்க வேண்டும். மனைவி தனது எண்ணங்களை சற்று முன்னோக்கி எடுத்துச் சென்று, தனது அன்பை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். இந்த மாற்றம் இருக்குமானால், கணவன் தனது பாசத்தை – அன்பை மனைவியிடம் அடிக்கடி காட்டும் சூழ்நிலையும் – வாய்ப்பும் ஏற்படும். 

வாழ்க்கையை தாமரைப் பூவிற்கு ஒப்பிடுவார்கள். அதாவது தாமரைப் பூ போன்று, இல்லற வாழ்வில் தண்ணீராக மனைவியும், இலையாக கணவனும் வாழக் கூடாது. வெளியில் இருந்து பார்க்கும் பொழுது, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல், இருமனங்களும் ஒருமனதாக இணைந்து வாழும் தோற்றத்தை வெளிப்படுத்த வேண்டும். குடும்பத்தை முறையாக வழிநடத்திச் செல்லும் கணவனுக்கும் மனைவிக்கும் இதுவொரு தனிப்பெருமையைச் சேர்க்கும். 

அதேபோல், கணவனிடம் அதிகமாக கேள்விகள் கேட்பதும் – கணவனைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கணவனைப் பற்றி ஊடுறுவிச் சென்று பார்ப்பதையும் விட வேண்டும். அதனால், திருமணத்திற்குப் பின்னர் கணவன் ஒரு பக்குவத்தை அடையும் பொழுது, மனைவி ஒரு நல்ல கணவனை தனக்கு வாய்த்துள்ளதாக அறிந்து மகிழும்போது, அவளுக்கு ஏங்கே தங்கத்தைப் பற்றி நினைவு வரப் போகிறது? 
 
மனைவி மேல் உள்ள பிரியத்தை, பெரும்பாலான ஆண்கள் வெளிக்காட்டுவது இல்லை. இந்த நிலையில் மனைவி நினைப்பதுண்டு. தனது கணவனுக்கு  தன்மேல் பாசமே இல்லை என்று தவறாக நினைத்துக் கொண்டு, சிறு பிரச்சினையைக் கூட பூதாகரமாக்கி விடுவதுண்டு. இதுபோன்ற பிரச்சினைகள் குடும்பத்தில் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டுமானால், கணவன் தனது  பாசத்தை - அன்பை – ஏன் காதலையும் கூட மனைவியிடம் அடிக்கடி காட்டும் பொழுது, தனது கவணவன் ஒரு தங்கமான கணவன் என்று நினைத்து பெருமைப்பட முடியும்.  

மனைவி என்ன சமைத்துக் கொடுத்தாலும், முகத்தைப் பார்த்து ரசித்து – ருசித்து சாப்பிடுவது, மனைவி சமைக்கும் பொழுது, அவள் வேண்டாம் என்று சொல்லாலும் கூட, அவளுக்காக, சமையலறையில் சின்ன சின்ன உதவிகளை குறிப்பாக, காய்கறிகளை வாங்கி வருவது – வெட்டித் தருவது – சுத்தம் செய்வது – நகங்களை வெட்டி விடுவது - போன்ற உதவிகளைச் செய்யும் பொழுது, தனது கணவன் மீது அளவிலா அன்பை வைத்திருக்கிறான் என்ற எண்ணத்தில் அவள், தங்கம் வாங்க வேண்டும் என்பதையே மறந்து விடுகிறாள். 

ஒரு கணவன் மனைவி முழு நம்பிக்கைக் கொண்டவனாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கணவனாக வாழ விரும்ப வேண்டுமென நினைத்தால், தனது சொந்தப் பிரச்சினைகளை மொத்தமாக சொல்ல முடியாவிட்டாலும், ஓரளவிற்குச் சொல்லி,  அவளின் ஆலோசனைகளை கேட்கும்பொழுது,  மனைவியும் கணவன் தன் மீது கொண்ட அன்பை புரிந்துக் கொள்கிறாள். அவனிடம் அதிகமான அன்பைச் செலுத்துவாள்! 

இதுவே ஒரு இல்லற வாழ்வின் வெற்றி!

இங்கே தங்க நகைகள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வராது – 
புன்னகை மட்டுமே தவழ்ந்து வரும்!

www.myvelicham.com