காலத்தால் அழியாத இந்த உறவுகள் யார் கணவனா? மகனா?
relationships that do not perish with time? Are they husbands or sons?
Date : 24 May 2025 News By : Jayarathan Time : 11.30
பாரம்பரியமான சமூகத்தில் வாழும் பெண்கள் உறவுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இது ஒரு சமூகத்தின் கட்டுப்பாடு. அந்த வகையில் ஒரு பெண்ணின் வாழ்கையில் கணவன் – மகன் என்ற உறவு வரும்போது யாருக்கு முதலிடம் கொடுப்பது? இருவருமே முக்கியமானவர்கள் தான்!
இருவரும் குடும்பத்திற்காக வெவ்வேறு கடமைகளைச் செய்து வருவதால் இருவருமே முக்கியமானவார்களாகவும், பாசத்திற்குரியவர்களாகவும் உள்ளனர்.
திருமணத்தின் போது, மனைவி கணவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள். அதே மனைவி தன் பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது, பாசத்திற்குரிய ஒரு தாயாக மாறி, அந்தப் பிள்ளைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள். இந்த இரண்டு உறவுகளுமே அழகானவை – பிரிக்க முடியாதவை.
ஒரு நல்ல கணவன் தனது மனைவியின் குணங்களை மதிக்கும்பொழுது, பாசமுள்ள மகனும் தனது தந்தையின் பண்பினை மதித்து, தாயை உயர்ந்த இடத்தில் வைக்கிறான். இங்கே இருவருமே அவள் மீது அன்பும் மரியாதையையும் வைக்கின்றனர். இதனால் அவள் ஒரு சம நிலையான உறவை பேணிக் காக்கும் இடத்திலும் இருக்க வேண்டிய சூழ்நிலை அவளுக்கு ஏற்படுகிறது.
என்றாலும், குடும்பத்தில் தவிர்க்க முடியாத – வெறுக்கத்தக்க – ஏற்றுக் கொள்ள முடியாத - ஒரு சூழ்நிலை என்று வரும்போது இவர்களில் யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது? எந்தவொரு உறவுக்கும் இதுவொரு தடுமாற்றமான மனநிலைதான்! காலத்தால் அழியாத இந்த உறவுகள் விட்டுப் பிரிந்துச் சென்றாலும் கூட, காலத்திற்கு அந்தப் பாசம் நெஞ்சில் ஒரு மூள்ளாகத்தான் இருக்கும். - நினைவிலிருந்து மறக்க முடியாதது.
சரி! அப்படியே எந்த உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று முடிவெடுக்கும்போது அல்லது எந்த உறவு நல்ல உறவு அதாவது கணவனா – மகனா என்று தீர்மானிக்கும்போது, அந்த இருவரின் உறவிலும் எதிர்மறை தாக்கத்தையும் ஏற்படுத்தி விடலாம். எனவே, இதனை கத்தி முனையில் நடப்பதுபோல் கவனமாக நடந்துக் கொள்ள வேண்டியது அந்தப் பெண்ணின் கடமையாக உள்ளது.
மகன் என்று வரும்போது, பிள்ளைகள் நவீன காலத்தில் இருப்பதாலும், அவர்களின் சுற்றுச்சூழல் – அவர்களை சில நேரங்களில் மாற்றுகிறது. சில நேரங்களில் தீய வழியிலும் செல்லும் வாய்ப்பும் ஏற்படுகிறது. ஒரு நல்ல பெற்றோருக்கும் இதுபோன்ற பிள்ளைகள் இருக்கும்பொழுதும், அவர்களை திருத்த வேண்டிய கட்டாயக் கடப்பாடு பெற்றோராகிய இருவருக்குமே இருக்கிறது. இந்த இடத்தில் மகன் திருந்தவில்லை அல்லது திருத்தவே முடியவில்லை என்ற நிலையில் மகனை விட்டுக் கொடுக்க முடியாமல் தவிக்கிறாள். இங்கே யாரை குறைச் சொல்ல முடியும்?
அதனால், ஒரு தாய் தன் மகனுக்கும் கணவனுக்கும் இடையே ஒருபோதும் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை வரக்கூடாது. ஆனால் வாழ்க்கை சில சமயங்களில் எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டு வரலாம்.
ஒருவேளை கணவருக்கும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கலாம், அல்லது இருவரில் ஒருவருக்கு அவளின் முழுமையான ஆதரவு தேவைப்படலாம். மனம் விட்டுப் பேசிப் பார்க்கலாம். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் ஒரு தாய் என்ன செய்ய முடியும்?
ஆனால் இன்றுள்ள சூழ்நிலையில் பெண்கள் அதிகம் பள்ளி, பல்லைக்கழகம் என்று பல்வேறு நிலைகளில் உயர்ந்திருக்கிறார்கள். அவர்கள் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எண்ணுவதில்லை. யாருக்கு எது சரியோ – பொருத்தமோ அதைச் செய்கின்றனர்.
அதேபோல், கணவன்மார்களும் அதிகமாகவே சம்பாதிக்கின்றார்கள். தனது தேவைகளைத் தானே பூர்த்திச் செய்துக் கொண்டும், குடும்பம் – பிள்ளைகள் என்று வரும்போது அவர்களையும் பார்த்துக் கொண்டும் இருக்கும் நல்ல கணவன்மார்களும் உள்ளனர்.
வளர்ந்த மகனாக இருந்தால், அவனும் தனது பெற்றோரைப் போல தனித்து நின்று வாழ்க்கையை வாழ்ந்து, பெற்றோர்களையும் சமாளிக்கிறான்.
ஒவ்வொரு பெண்ணின் அனுபவமும் தனித்துவமானது. மேலும் இந்த கேள்விக்கு ஒரு சரியான அல்லது தவறான பதில் இல்லை என்று ஒன்றுமில்லை. காலமும், சூழ்நிலையும் முடிவெடுக்கப்பட வேண்டிய ஒரு மனைவியின் – தாயின் கையில் உள்ளது.
எந்தப் பக்கம் அவள் சென்றாலும் ஒரு முழுமையான வாழ்க்கையை அவளால் வாழவே முடியாது! எங்கேயோ ஓரிடத்தில் அவள் அந்த உறவை தவற விட்டவளாகவே எண்ணி மடிவாள்!
கணவன் – மகன் உறவு என்பது, ஒரு சங்கிலித் தொடர்பு போன்றது. கண்ணாடி குடுவையைப் போன்றது. அறுந்து விட்டால் – உடைந்து விட்டால் மீண்டும் அதனை சமநிலைப்படுத்துவது மிகவும் கடினம்.
மதில் மேல் பூனை என்ற சொற்றொடரைப் போன்று, எந்தப் பக்கத்தில் விழுந்தாலும் அந்தப் பாதிப்பு மூன்று பேரையும் பாதிக்கும்.
ஆகவே, "கணவனா? - மகனா?" என்ற கேள்விக்கு ஒரு நிலையான பதில் இல்லை என்றே கூறலாம். இது நவீன காலம்! யாரும் யாரையும் சார்ந்து வாழும் நிலையில்லை!
கணவன் மற்றும் மகனுக்கு இடையேயான விரிசலை சரி செய்வது ஒரு சவாலானது! அது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம் – முடிவைப் பொறுத்தது.
www.myvelicham.com / face book / tik tok / intg / you tube