'பைகளில் 110 கிலோ கஞ்சா' – தாய்லாந்தில் இருந்து திரும்பிய 22 இலங்கை துறவிகள் கைது
"110 kilos of cannabis in bags – 22 Sri Lankan monks returning from Thailand arrested"
Date : 03 May 2026 News By; Bhuvana
இலங்கையில் உள்ள விமான நிலையம் ஒன்றில், 22 பௌத்த துறவிகளின் பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைநகர் கொழும்புக்கு சனிக்கிழமை வந்திறங்கிய அந்தத் துறவிகள் ஒவ்வொருவரிடமும், தலா 5 கிலோ அளவிலான 'குஷ்' வகை கஞ்சா இருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இது மிகவும் வீரியமிக்க போதைப்பொருள் வகையாகும். அவர்களின் பயணப் பைகளில் அமைக்கப்பட்டிருந்த "போலி அடுக்குகள்" உள்ளே இவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். பெயர் குறிப்பிடப்படாத ஒரு நபரால் வழங்கப்பட்ட, அனைத்துச் செலவுகளும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நான்கு நாள் விடுமுறைச் சுற்றுலாவை முடித்துக் கொண்டு அவர்கள் தாய்லாந்திலிருந்து திரும்பியபோது அவர்கள் பிடிபட்டனர்.
இந்தச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்ததாக நம்பப்படும் 23-வது துறவி ஒருவர், கொழும்பு புறநகர்ப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளது.
காவல்துறை செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, அந்தச் சுற்றுலாவில் கலந்து கொள்ளாத அந்தத் துறவி மற்றவர்களிடம், "இந்தப் பார்சல்கள் ஒரு நன்கொடை" என்றும், அவற்றைச் சேகரிக்க ஒரு வேன் வரும் என்றும் கூறியுள்ளார்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களைச் சேர்ந்த இந்தத் துறவிகளில் சிலரது செல்போன்களை இலங்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் ஆய்வு செய்தபோது, அவர்கள் சாதாரண உடைகளை அணிந்து விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் கண்டறியப்பட்டன.
துறவிகளுக்குச் சொந்தமான செல்போன்களில் இது போன்ற புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் தங்களது விடுமுறைச் சுற்றுலாவை மகிழ்ச்சியாகக் கழிப்பதை இவை காட்டுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த 22 துறவிகளும், மேலதிக விசாரணைக்காக ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தாங்கள் எதைக் கொண்டு வருகிறோம் என்பது அந்தத் துறவிகளுக்குத் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளது.



ganapathy







\
