சனாதனம் அதாவது தமிழர்களை இழிவுபடுத்தும் செயல் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
"Sanatan, that is, the act of insulting Tamils, still continues even today."
Date:07 June 2026 NewsBy:Nagapanju
மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் 13-ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் நேற்று 31.5.2026இல், தலைநகர் கோலாலும்பூர்; பிரிக்பீல்சு ருக்குன் தெத்தாங்கா அரங்கில் கழகத் தலைவர் நாக.பஞ்சு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்தியா தென்நாட்டிலிருந்து மலாயாவிற்குப் பிழைக்க வந்த நம் மக்கள் ஒரு காலகட்டத்தில் தோட்டப்புறங்களிலும் நகர்ப்புறத்திலும் சனாதனத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்துள்ளனர். 1954-ஆம் ஆண்டில் தந்தை பெரியார் அவர்கள் மலாயாவிற்கு வருகைதந்து அவர் ஆற்றிய சொற்பொழிவுக்குப்பின்னர்.
அதனை இங்குள்ள மக்கள் புரிந்துகொண்டு, சனாதனத்தை எதிர்த்துள்ளனர்.
ஆனால், இந்தியாவில் பார்ப்பனிய ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருப்பதால் அங்குச் சனாதனம் அதாவது தமிழர்களை இழிவுபடுத்தும் செயல் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
மலேசியாவில் நமக்குப் பல வேலைகள் இருக்க அண்மையில், பத்துமலை திருமுருகன் வழிபாட்டுத் தளத்தில், தமிழ்நாட்டின் அந்நாட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படைக் கருத்துக்களைச் சட்டசபையில் முன்வைத்துப் பேசிய ஒருவரின் கருத்தைக் கண்டித்து, பத்துமலை தேவஸ்தானம் நடத்திய கண்டனக் கூட்டத்தை மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம் வன்மையாகக் கருதுகிறது என்று அதன் தலைவர் நாக.பஞ்சு தமதுரையில் கூறினார்.
சனாதனம் என்றால் நிலையானது; மாற்றக்கூடாதது என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா..? அதில் ஒருசிலவற்றை இங்குச் சொல்கிறேன் கேளுங்கள்..!
1. சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுக்காதே என்று சொல்லி, கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக்க் தடுத்து வைத்ததே, அது சனாதனம்.
2. கணவன் இறந்த பெண்களை: சதீ என்று சொல்லி; மனைவியைக் கணவனின் உடலோடு கட்டி, உயிரோடு கொழுத்தியதே அது சனாதனம்.
3. படிப்பு எங்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) மட்டும்தான் வரும்; உங்களுக்கு வராது என்று தடுத்ததே அது சனாதனம்.
4. விதவையானப் பெண்களை (கைம்பெண்) மொட்டையடித்து, வெள்ளைச் சேலை கட்டவைத்து ஒரு மூலையில் உட்கார வைத்ததே அது சனாதனம்.
5. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு தரக்கூடாது என்று சொன்னதே அது சனாதனம்.
6. பன்றி நடக்கலாம், நாய் நடக்கலாம்; ஆனால், குறிப்பிட்ட இந்து மக்கள் மட்டும் அத்தெருவில் நடக்கக்கூடாது என்று தடுத்ததே அது சனாதனம்.
7. ஒரு காலகட்டத்தில்; ஒரு குறிப்பிட்ட இந்துமத மக்கள் கூட்டத்தையே காலில் செருப்பு போடக்கூடாது என்று சொன்னதே அது சனாதனம்.
8. நீ சூத்திரன் என்று சொல்லி; அவர்கள் தொட்டப் பொருளைத் தண்ணீர் தெளித்து, பின்னர் எடுப்பார்களே..! அது சனாதனம்.
9. குலக்கல்வி; (சாதித்தொழில்) அவர் அவர் சாதித்தொழிலை மட்டுமே அவர்கள் செய்யவேண்டும் என்றது சனாதனம்.
10. கோயில்களில் நமது பெண்களைத் தேவதாசிகளாக: பொட்டுக்கட்டி விட்டதே அது சனாதனம்.
11. கோயில்களில் தமிழில் அர்ச்சனை கூடாது; தமிழ் நீஷ மொழி என்கிறதே அது சனாதனம்.
12. நம்ம பாட்டியோடப் பாட்டி; ரவிக்கை அணிய உரிமை இல்லை; அப்படி அணிய வேண்டுமானால், முலை அளவைப் பொறுத்து; அதற்கு முலைவரி கேட்டதே அது சனாதனம்.
13. பெண் சுயவிருப்பத்தில் வாழக்கூடாது; சிறு வயதில் தந்தை கட்டுப்பாட்டிலும், பருவ வயதில் கணவன் கட்டுப்பாட்டிலும், கணவன் இறந்தபின் பிள்ளைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும். எப்போதும் தன் விருப்பத்தில் வாழக்கூடாது. பெண்களுக்கு எதிரான மிகப் பெரிய வன்கொடுமை. இது சனாதனம்.
14. எச்சில் வந்தால் கீழே துப்பக்கூடாது. கழுத்தில் கொட்டாங்குச்சியை மாட்டி வைத்துக்கொண்டு அதிலேதான் துப்பவேண்டும் அது சனாதனம்.
15. ஆண்கள் வேட்டியை முட்டிக்கு மேல்தான் தூக்கிக் கட்டவேண்டும் அது சனாதனம்.
16. துண்டு தோளில் போடக்கூடாது அது சனாதனம்.
17. தமிழன் காலிலே செருப்பு அணியக்கூடாது அது சனாதனம்.
இதுபோன்ற கொடுமைகள் எவ்வளவோ நடந்துள்ளன.
(மேலே கூறிய அனைத்தும் மலேசியாவில் தடைசெய்யப்பட்டு நடைபெறாமல் இருக்கலாம்; ஆனால், தமிழ்நாட்டில் இக்கொடுமை ஆங்காங்கே தொடர்ந்து நடக்கிறது. ஆகையால், சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று ஒருவர் கூறுவதில் என்ன தவறு உள்ளது..? சிந்தியுங்கள்..!)
சனாதனம் என்ற ஒற்றைச்சொல்லை வைத்துக்கொண்டு: இதுபோல் இன்னும் எவ்வளவோ கொடுமைகள் நமது மக்களுக்கு நடந்துள்ளன; அவற்றைக் கடந்த நூராண்டுகளுக்கு முன்பிருந்தே ‘பகுத்தறிவு பகலவன்’ அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் பல போராட்டங்களுக்குப்பின் ஒழிக்கப்பட்டன.
என்றாலும், அவை இன்னும் ஆங்காங்கே சனாதனத்தை ஆதரிக்கும் பாஜக, இந்துத்துவா, RSS போன்ற பார்ப்பனிய அமைப்புகளின் வன்கொடுமையால் நடந்துகொண்டுதான் இருக்கிறன.
திருமூலரின் சமயக் கொள்கையான ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்பதை, திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியபோது அதனைச் சமயக் கொள்கையாக அறிவித்தார் பேரறிஞர் அண்ணா.
அந்த அண்ணாவின் வழிநடக்கும் திமுகவின் மேனாள் தலைவர் மானமிகு. மு.க.ஸ்டாலின் தமிழர்களை அர்ச்சகர்களாக நியமித்த முயற்சிக்குச் சனாதனத்தின் மூலம் பிராமணர்கள் எதிர்த்தனர்.
மானமிகு. உதயநிதி ஸ்டாலினும் சமய வளர்ச்சிக்கோ இந்து சமய வழிபாட்டுக்கோ எதிராக எந்தக் கருத்தும் தெரிவிக்காத நிலையில், தமிழர்களிடையே சாதிப் பிரிவினையை உருவாக்கி, அதன்மூலம் பிராமணர்கள் தாங்கள்தான் உயர்சாதியினர் என்பதை நிலைநிறுத்துவதற்காக்க் கட்டமைத்த சனாதனக் கொள்கையைத்தான் எதிர்த்தார்.
இதற்காக, மானமிகு. உதயநிதியை எதிர்க்கும் பத்துமலை திருமுருகன் கோயில் தேவஸ்தானப் பொறுப்பாளர்களை மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் சார்பில் பெருங்கண்டனத்தைத் தெரிவிக்கின்றோம்.
கடந்த நூற்றாண்டில் மலேசியாவில், களியன் என்ற தமிழரின் உடல் உயர்சாதியினருக்கான இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் அதனால், அதைத் தோண்டியெடுத்து வேறு இடத்தில் புதைக்க நடந்த முயற்சிக்கு எதிராக வழக்குத் தொடுத்து நீதிமன்றம் வரை சென்று போராடி வெற்றியும் கண்டது அன்றைய மலேசிய திராவிடர் கழகம். இந்த வரலாறு பத்துமலை திருமுருகன் கோயில் தேவஸ்தான இன்றைய நிர்வாகத்தினருக்குத் தெரியாமல் இருக்கலாம்.
மலேசியாவில், தோட்டப்புறங்களில் சாதிவாரியாக ‘லயங்கள்’ (தொடர்வீடுகள்) இருந்தனவே அதற்கெல்லாம் சனாதனம்தான் காரணம் என்பதைப் பத்துமலை தேவஸ்தானம் அறியுமா..?என்று பத்திரிகைகளுக்கு விடுத்த பத்திரிகை செய்தியில் நாக.பஞ்சு தெரிவித்துக் கொண்டார்.



ganapathy







\
