மலேசியக் கபடி அணிக்கு ஆதரவு வழங்கப்படும்! துணையமைச்சர் யுனேஸ்வரன்
Malaysian Kabaddi
Date:27 Feb 2026 News By:Ganapathy
2025-ஆம் ஆண்டு தென்கிழக்காசிய (SEA Games) விளையாட்டு போட்டியில் மலேசிய கபடி அணி தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்தச் சாதனையைத் தொடர்ந்து, மலேசிய கபடி சங்கத் தலைவர் பீட்டர், தேசிய கபடி அணியின் நிர்வாகி, கபடி வீரர்கள், பயிற்றுனர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களைத் தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். கபடி வீரர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில் துணையமைச்சர் நற்சான்றிதழ்கள், நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
கபடி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகும். அதனைப் பாதுகாப்பதும் வளர்ப்பதும் நமது ஒவ்வொருவரின் கடமையாகும். இதற்காக கபடி விளையாட்டாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என்றார் துணையமைச்சர். தற்போது பல இனங்கள், மொழிகள் மற்றும் கலாச்சார பின்னணியைக் கொண்ட இளைஞர்களை ஒரே மேடையில் இணைக்கும் திறன் கபடி விளையாட்டிற்கு இருப்பதாகவும், இது பரஸ்பர புரிதல், ஒற்றுமை மற்றும் நாட்டுப்பற்றை வளர்க்கும் வலுவான கருவியாகச் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மலேசியாவில் கபடியைத் தொழில்முறை ரீதியில் மேம்படுத்த சிறப்பு வசதியுடன் கூடிய கபடி அரங்கம் அமைக்க வேண்டும் என்ற மலேசிய கபடி சங்கத்தின் கோரிக்கையைக் குறித்து இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருடன் கலந்தாலோசிக்கத் தாம் தயாராக இருப்பதாக அவர் உறுதி அளித்தார். மேலும், கபடி விளையாட்டை இந்திய சமூகத்தைத் தாண்டி அனைத்து இனங்களிடமும் கொண்டு சேர்க்க சமூக ஊடகங்களை வலுவாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அரசு தொடர்புடைய நிறுவனங்கள் (GLC) மற்றும் பொதுமக்கள் வழியாக நிதி ஆதரவைப் பெறும் முயற்சிகளை கபடி சங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, மலேசிய கபடி சங்கத் தலைவர் பீட்டர், தங்களின் சாதனைகளுக்கு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டமைக்கு நன்றி தெரிவித்தார். மேலும், கபடி வீரர்களுக்குத் தொடர்ந்து வழங்கப்படும் ஆதரவு அவர்களுக்குப் பெரும் ஊக்கமாக இருப்பதுடன், இது அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும் என்றும் அவர் கூறினார். கபடி தற்போது சீ, ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் காமன்வெல்த் நிலைகளில் இடம்பெற்று வருவதாகவும், எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளிலும் கபடி இடம்பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
www.myvelichamsportsnews. / myvelichamtv.com



ganapathy







\
