கொரிய தமிழ்ச் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இப்பொங்கல் விழா
Pongal festival in Korea Tamil Association
Date : 13 March 2026 News By. Ganapathy
தென்கொரியாவில் விண்ணைப் பிளந்த 'பொங்கலோ பொங்கல்' முழக்கம்: சுவோன் நகரில் தமிழர்களின் பிரம்மாண்ட சங்கமம்!
தமிழகத்தில் பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய நிலையில், தென்கொரியாவில் வசிக்கும் தமிழர்கள் ஒன்றிணைந்து தங்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையை நேற்று வெகு விமரிசையாகக் கொண்டாடினர்.

கொரிய தமிழ்ச் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இப்பொங்கல் திருவிழா, இவ்வாண்டு பிப்ரவரி 28 சனிக்கிழமையன்று, சுவோன் (Suwon) நகரில் உள்ள புகழ்பெற்ற SKKU பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், தென்கொரியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான தமிழர்கள் குடும்பம் சகிதமாக 150-க்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர்கள் மற்றும் சிறப்பிப்பு
பெண்கள் குத்துவிளக்கு ஏற்றிய பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே ஆரம்பமானது. கொரிய தமிழ்ச் சங்கத்தின் இணைச்செயலாளர் முனைவர் சம்பத் குமார் அரங்கத்தில் குழுமியிருந்த மக்களை வரவேற்று பேசினார். செல்வி சுபவெண்ப லட்சுமி வரவேற்பு நடனம் ஆடினார்.
தென்கொரியாவின் இந்திய தூதரக அதிகாரி உயர்திரு. சுரேஷ்குமார் (இரண்டாம் செயலாளர், தூதரகம் மற்றும் சமூக விவகாரங்கள்), பேராசிரியர் செந்தில் குமார், பேராசிரியர் சுப்பிரமணிய அங்கையா ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர். அவர்கள் முறையாக பொன்னாடை அணிவிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். தூதரக அதிகாரி சுரேஷ்குமார் கொரியா-வாழ் தமிழ் உறவுகளுக்கு தனது பொங்கல் வாழ்த்தையும், செய்தியையும் வழங்கினார். மேலும், அவர் “நான் முதல்வன்” திட்ட மாணாக்கரை வழிநடத்தியவர்களுக்கும், “கற்க கசடற” இணையவழிக் கல்வி ஆசிரியருக்கான பட்டயப் படிப்பில் தகுதி பெற்றவர்களுக்கும் தமிழக அரசின் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
மௌன அஞ்சலியும் சங்கத்தின் செயல்பாடுகளும்
நிகழ்ச்சியில், அண்மையில் மறைந்த தோழர் ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர், கொரிய தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் முனைவர் முத்துச்சாமி கடந்த ஆண்டில் சங்கத்தின் செயல்பாடுகளையும், எதிர்காலத் திட்டமிடல்களையும் விளக்கிக் கூறினார். பின்னர், சங்கத்தின் தலைவர் முனைவர் அரவிந்தராஜா சங்கத்தின் எதிர்கால ஆளுமைக் குழு உறுப்பினர்களை முறையாக அறிமுகப்படுத்தினார். இவ்வாண்டிற்கான நாள்காட்டி அறிமுகப்படுத்துதலும் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் முனைவர் செலஸ்டின் ராஜா, கொரிய தமிழரசி 'ஹோ ஹூவாங் ஒக்' இன் வரலாற்றுத் தடயம் பற்றிய விளக்கக்காட்சி உரை ஒன்றை எளிய நடையில் ஆற்றினார்.

சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்த சிறப்புப் பட்டிமன்றம்
உணவு இடைவேளையின்போது திருமதி வைஷ்ணவி, திரு விவேகானந்தன், திருமதி சுமதி நரசிம்மன் ஆகியோரின் 'விருக்ஷம்' உணவுக் குழுவினரால் சமைக்கப்பட்ட அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டன. பிற்பகலில் மீண்டும் நிகழ்ச்சி ஆரம்பமானதும், நிலையான மகிழ்ச்சி என்பது விரும்புவதைப் பெறுவதிலா? அல்லது பெறுவதை விரும்புவதிலா? என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பட்டிமன்றம் அரங்கில் இருந்த மக்களைச் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தது எனலாம். முனைவர். இராஜாராம் இராஜமோகன் நடுவராகவும், செல்வி ஸ்ரீரெங்கநாயகி, முனைவர் பூங்கவிதை, திரு விபின் ஜியோ ஆகியோர் முதல் அணியிலும், திருமதி ஜெனட், முனைவர் குணசேகரன், முனைவர் கற்பகம் வீரப்பன் ஆகியோர் எதிர் அணியிலும் தங்கள் வாதத்தை முன்வைத்தனர். பட்டிமன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக முனைவர் செலஸ்டின் ராஜா பொறுப்பேற்றார்.
சிறார் மற்றும் இளைஞர்களின் கலைத்திறன்
நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்களை மகிழ்விக்கும் விதமாக காலை முதல் மாலை வரை ஆடலும், பாடலும், பல்வேறு குழும விளையாட்டுப் போட்டிகளும், குலுக்கல் முறையில் தேர்வுப் பரிசுகளும் நிகழ்ச்சிகளின் நடுவே இடம்பெற்றிருந்தன. சிறார் நிகழ்ச்சியில் பிரித்விகா குணசேகரன், லயா சரவணன், சுபவெண்ப லட்சுமி, குருதீப் ஹுன்னுன் சந்தோஷ், ரியா சந்தோஷ், சாரா மற்றும் ஆல்யா, ஷெர்லின் மரியா, மகிழினி, பேரின்ப ப்ரியன் ஆகியோர் தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் மனதை வென்றனர். மேலும், "கற்க கசடற" இணையவழி வாயிலாக தமிழ் பயின்றோரின் மழலைத் தமிழ்ப் பேச்சுகள் அருமையாக அமைந்திருந்தன. இளைஞர் நிகழ்ச்சியில் திரு திப்பன் மணிகண்டன், திரு விபின், செல்வி சரஸ்வதி, திருமதி ஜெனட், திருமதி கிருபா சிவசுப்ரமணியன், செல்வி ஸ்ரீரெங்கநாயகி, திருமதி அபர்ணா, திருமதி மதுமிதா ஆகியோர் பங்குபெற்று மனதை மகிழ்விக்கும் ஆடல், பாடலை வழங்கினர். மாலையில் திருமதி ரீனா ஜெசி நன்றியுரை வாசிக்க விழா இனிதே நிறைவடைந்தது.
ஒருங்கிணைப்புக் குழுவின் அர்ப்பணிப்பு
இந்நிகழ்ச்சியை சங்கத்தின் ஆளுமைக்குழு உறுப்பினர்கள் முன்னின்று நடத்தினர். முனைவர் அரவிந்த ராஜா, முனைவர் வெங்கடேஷ், முனைவர் சேஷா, திரு வினோத் ஆகியோர் அரங்க ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். முனைவர் ராஜி அச்சுதன், முனைவர் ஜெரோம், திரு சாமிராஜன், செல்வி ஸ்ரீரெங்கநாயகி ஆகியோர் பதிவு மேலாண்மைப் பணியை மேற்கொண்டனர். முனைவர் பத்மநாபன், திரு சிவகுமார் உணவு வழங்குதலை குறைவின்றி கவனித்துக் கொண்டார்கள். முனைவர் கற்பகம் வீரப்பன், திருமதி க்ருபா சிவசுப்ரமணியன் இருவரும் நிகழ்ச்சியைச் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள். பொறியாளர் ஆனந்த், திரு ராஜ்குமார் ஆகியோர் புகைப்படம் மற்றும் காணொளி வெளியிடுதலுக்கு உதவினர். சிறார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக திருமதி வைஷ்ணவி, முனைவர் பூங்கவிதை, திருமதி ஜெனட், திருமதி அபர்ணா, திருமதி மதுமிதா ஆகியோரும், இளைஞர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக செல்வி சரஸ்வதி (ஆடல்), திரு விபின் (பாடல்), திரு திப்பன் மணிகண்டன் (மேடைச் சிரிப்புரை) ஆகியோரும் திறம்பட செயல்பட்டனர்.
முன்னதாக, சங்கத்தின் சார்பாக நடைபெற்ற இப்பொங்கல் நிகழ்ச்சிற்கு தமிழ் ஆளுமைகள் அழைப்பிதழ்பேரில் வாழ்த்துச் செய்தியினை அனுப்பியிருந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர் மற்றும் சிலம்புக் கலைப் பயிற்றுநர் (18 ஆண்டுகளுக்கும் மேலாக) திரு கார்த்திக் ராஜா, வழக்கறிஞர் மற்றும் தமிழ் நாட்டுப்புறக் கலைஞர் (20 ஆண்டுகளுக்கும் மேலாக) திரு மு. வெ. ஆடலரசு ஆகியோர் ஆவர். அவர்களுக்கு சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
அயல்நாட்டிலும் அழியாத அடையாளம்
தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய கொரிய மண்ணில், தங்களின் வேர்களை மறக்காமல் அடுத்த தலைமுறைக்கும் தமிழ் பண்பாட்டைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த விழாவை கொரிய தமிழ்ச் சங்கம் மிக நேர்த்தியாக ஒருங்கிணைத்திருந்தது. திட்டமிட்டபடி அனைத்து நிகழ்வுகளும் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்ததாக சங்க நிர்வாகிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். கடல் கடந்து வாழ்ந்தாலும், மொழிப்பற்றும் பண்பாட்டுப் பற்றும் தமிழர்களின் குருதியிலேயே ஊறியுள்ளது என்பதை இந்த விழா மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்துள்ளது.



ganapathy







\
