சொக்சோ அதிகாரி கைது- எம்.ஏ.சி.சி. உறுதிப்படுத்தியது

SOCSO official arrested- MACC Confirmed

சொக்சோ அதிகாரி கைது- எம்.ஏ.சி.சி. உறுதிப்படுத்தியது

கோலாலம்பூர்,19 May 2023

“ஓப்ஸ் ஹையர் 2.0“ நடவடிக்கையின் கீழ் தனது
அதிகாரி ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் (எம்.ஏ.சி.சி.)
நேற்று கைது செய்யப்பட்டதை சொக்சோ எனப்படும் சமூகப் பாதுகாப்பு
நிறுவனம் உறுதிப்படுத்தியது.

பெஞ்சானா எனப்படும் தேசிய பொருளாதார மீட்சித் முன்னெடுப்பின் கீழ் வேலை வாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டத்திற்கான நிதி கோரிக்கைளை
அங்கீகரித்ததில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அந்த அதிகாரி கைது செய்யப்பட்டதாக சொக்சோ அறிக்கை ஒன்றில் கூறியது.

இந்த விசாரணையில் சொக்சோ தலையிடாது என்பதோடு விசாரணைக்கு ஒத்துழைப்பையும் வழங்கும். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது விசாரணை நடத்தும் பொறுப்பையும் எம்.ஏ.சி.சி.யிடம் ஒப்படைத்து விடும் என அந்த அறிக்கை தெரிவித்தது.

பெஞ்சானா வேலை வாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் 13 லட்சம்
வெள்ளி சம்பந்தப்பட்ட பொய்யான நிதிக் கோரிக்கையை அங்கீகரிப்பதற்கு
நிறுவனம் ஒன்றிடமிருந்து பல ஆயிரம் வெள்ளியை லஞ்சமாகப் பெற்ற
புகாரின் பேரில் சொக்சோ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக
ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.