பிரிட்டன் புதிய அமைச்சரவையில் தமிழ் பெண்ணுக்கு முக்கிய பதவி

Key post for Tamil woman in UK's new cabinet

பிரிட்டன் புதிய அமைச்சரவையில் தமிழ் பெண்ணுக்கு முக்கிய பதவி
பிரிட்டன் புதிய அமைச்சரவையில் தமிழ் பெண்ணுக்கு முக்கிய பதவி

08 Sept 2022

லண்டன்: பிரிட்டனில் பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் அமைச்சரவையில், தமிழகத்தை பூர்வீகமாக உடைய சுயெல்லா பிரேவர்மேன், 42, உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கியத்துவம்

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ், நேற்று முன்தினம் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து தன் அமைச்சரவையை அவர் அறிவித்துள்ளார். இதுவரை அறிவிக்கப்பட்டவர்களில், வெள்ளையர் யாரும் இல்லை. மற்ற நாடுகளில் இருந்து வந்த சிறுபான்மையினருக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

அதுபோல், பிரதமர் பதவிக்காக நடந்த பழமைவாத கட்சித் தலைவர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய வம்சாவளி ரிஷி சுனக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாருக்கும் புதிய அமைச்சரவையில் வாய்ப்பு தரப்படவில்லை. போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்தபோது, ரிஷி சுனக் நிதியமைச்சராக இருந்தார். மற்றொரு இந்தியரான பிரீத்தி படேல், உள்துறை அமைச்சராக இருந்தார்.

தற்போதைய அமைச்சரவையில், இந்தியாவை பூர்வீகமாக உடைய சுயெல்லா பிரேவர்மேன் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் படித்துள்ள இவர், அட்டர்னி ஜெனரலாக இருந்து வந்தார். இவருடைய தாய் உமா, தமிழகத்தைச் சேர்ந்தவர். தந்தை பெர்னான்டஸ், கோவாவைச் சேர்ந்தவர். தாய் ஹிந்துவாகவும், தந்தை கிறிஸ்துவராக இருந்தபோதும், சுயெல்லா, புத்த மதத்தை பின்பற்றி வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்

.

கட்சித் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்ட சுயெல்லா, பிறகு போட்டியில் இருந்து விலகி, லிஸ் டிரஸ்சுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆப்ரிக்க நாடான கானாவைச் சேர்ந்த கவாசி கவார்தெங், பிரிட்டனின் முதல் கறுப்பின நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். மேற்கு ஆப்ரிக்க நாடான சியரா லியோன் மற்றும் பிரிட்டன் பெற்றோருக்கு பிறந்த ஜேம்ஸ் கிளவர்லி, வெளியுறவுத் துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

துணை பிரதமர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக தெரேசா கோப்பி, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சராக வென்டி மோர்டான் நியமிக்கப்பட்டுள்ளனர். பழமைவாத கட்சியின் முதல் பெண் கொறடாவாக வென்டி மோர்டான் இருப்பார். இந்தியாவை பூர்வீகமாக உடைய அலோக் சர்மா, 55, பருவநிலை மாறுபாடு விவகார அமைச்சராக தொடர்கிறார். அதுபோல ராணுவ அமைச்சராக இருந்த பென் வாலஸ், அந்தப் பதவியில் தொடர்கிறார்.

share :face book Twitter myvelicham.com